புதுவை மிஷன் வீதியில் நேற்று காலை வாகன ஓட்டிகள் திடீர் திடீரென சாலையில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது அவ்வழி யாக சென்ற லாரியில் இருந்து சோப் ஆயில் சாலையில் கொட்டியதால் அதில் இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழுந்தது தெரியவந்தது. சாலையில் நடந்து செல்வோரும் இதனால் பாதிக்கப்பட்டனர்
இதுகுறித்து புதுவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி ரித்தோஷ் சந்திரா தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து சரி செய்தனர்.
இதேபோல் நேற்று மதியம் கோரிமேட்டில் இருந்து முருகா தியேட்டர் வரையிலும் ரோட்டில் ஆயில் கொட்டி கிடந்தது. தட்டாஞ்சாவடி சுப்பையா திருமண நிலையம் அருகே வாகன ஓட்டிகள் ஏராளமானோர் கீழே விழுந்தனர். அவர்களை அப்பகுதியில் கட்டிட வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தூக்கி விட்டனர். மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மணலை ஆயில் மீது கட்டிட தொழிலாளர்கள் கொட்டினர். ஆயில் காரணமாக முருகா தியேட்டர் அருகிலும் வாகன ஓட்டிகள் பலர் வழுக்கி கீழே விழுந்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள், ஜிப்மர் மற்றும் புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
முருகா தியேட்டர் அருகே தொடர்ந்து இதேபோல் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்ததால் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் ஆயில் அதிகமாக கொட்டிக் கிடந்த பகுதியில் பேரி கார்டுகளை குறுக்கே வைத்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள், கோரிமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து ஆயிலை நீர்த்துப்போக செய்தனர். கோரிமேடு ஜிப்மர் எதிரே இருந்து ராஜிவ்காந்தி சிக்னல் வரை தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய இப்பணி பிற்பகல் 2 மணி வரை நீடித்தது.
போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தியதில் வெளியூரில் இருந்து புதுவை மின்சார வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர் ஏற்றி வந்த வேன் தான் இதற்கு காரணம் என தெரியவந்தது. கோரிமேடு ஜிப்மர் எதிரே உள்ள வேகத்தடையில் அந்த வேன் ஏறி இறங்கிய போது டிரான்ஸ்பார்மரில் இருந்த ஆயில் கசியத் தொடங்கி சாலை முழுவதும் கொட்டியுள்ளது.
மிஷன் வீதி மற்றும் திண்டிவனம் சாலையில் கொட்டிய ஆயிலால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்த சம்பவத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment